சூரா 18க்குரிய அடிக்குறிப்புகள்

*18:7 18:8-9க்கான அடிக்குறிப்பை பார்க்கவும்.

*18:8-9 இப்போது வெளிப்பட்டுள்ளபடி, எஃபிஸஸில் உறங்கிய ஏழு பேரான இந்தக் கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் சரித்திரம், 18:9&21ல் கூறப்பட்டுள்ளபடி உலக முடிவுடன் நேரடித் தொடர்பு கொண்டதாக உள்ளது. உலக முடிவை வெளிப்படுத்துவதில் இந்த நம்பிக்கையாளர்களின் பங்கு பின் இணைப்பு 25ல் விவரிக்கப்பட்டுள்ளது.

*18:16-20 பண்டைய நைசீனிற்கு 200 மைல்கள் தெற்கிலும்,மேலும் துருக்கியின் இன்றைய இஜ்மீருக்கு 30 மைல்கள் தெற்கிலும் எஃபிஸஸ் உள்ளது. குகைவாசிகள், இயேசுவின் போதனைகளைப் பின்பற்றவும் , மேலும் கடவுளை மட்டும் வழிபடவும் விரும்பிய இளம் கிறிஸ்தவர்கள் ஆவர். இவர்கள் இயேசுவிற்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகள் கழித்து, முக்கடவுள் கொள்கை அறிவிக்கப்பட்ட நைசீன் மாநாடுகளைத் தொடர்ந்து, சீர் குலைந்த கிறிஸ்துவத்தைப் பிரகடனம் செய்த நவீன கிறிஸ்தவர்களின் அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடியவர்கள் ஆவர். 1928ல், ஃப்ரான்ஜ் மில்ட்னர், என்ற ஆஸ்திரியத் தொல்பொருள் ஆய்வாளர் ஒருவர் எஃபிஸஸில் உறங்கிய அந்த ஏழு பேரின் கல்லறையைக் கண்டு பிடித்தார். அவர்களுடைய சரித்திரம் ஏராளமான கலைக்களஞ்சியங்களில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

*18:17 இந்த அடையாளம், அல்லது குறிப்பு, அந்தக் குகை வடக்கு நோக்கி இருந்தது என்பதை நமக்குக் கூறுகின்றது.

*18:21 பின் இணைப்பு 25ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்த விபரங்கள் உலக முடிவைத் துல்லியமாகச் சுட்டிக் காட்டத் துணைபுரிந்தது.

*18:24 இந்த முக்கிய கட்டளை அன்றாடம் கடவுளை நினைவு கூர்வதற்கு, நமக்கு வாய்ப்புகளைத் தருகின்றது.

*18:25 300 சூரிய வருடங்களுக்கும் 300 சந்திர வருடங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒன்பது வருடங்களாகும். இவ்விதமாக, கி.பி.1980(ஹிஜ்ரி 1400)ல் உலக முடிவிற்கு 300 வருடங்கள் (309 சந்திர வருடங்கள்) முன்னர் உலக முடிவின் கண்டுபிடிப்பு நிகழ வேண்டுமென சர்வ வல்லமையுடையவரால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது (72:27 & பின் இணைப்பு 25 ஐ பார்க்கவும்).

*18:32-42 கடவுளுடன் மனிதர்கள் வழிபடும் வெவ்வேறு தெய்வங்களுக்கு ஏராளமான உதாரணங்களைக் குர்ஆன் எடுத்துரைக்கின்றது; அவற்றில் குழந்தைகள் (7:190), மார்க்கத் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் (9:31), சொத்துக்கள் (18:42), மரணித்துவிட்ட மகான்கள் மற்றும் வேதம் வழங்கப்பட்டவர்கள். (16:20-21, 35:14 & 46:5-6), மற்றும் அகந்தை (25:43, 45:23) ஆகியவை அடங்கும்.

*18:50 விண்ணக சமூகத்தில் பெரிய நீண்ட சச்சரவு நடைபெற்ற போது (38:69), படைப்புகள் அனைத்தும் வானவர்கள், ஜின்கள், மற்றும் மனிதர்களாக வகைப்படுத்தப்பட்டனர் ( பின் இணைப்பு 7).

*18:51 சாத்தானும் அவனுடைய ஆதரவாளர்களும் (மனிதர்கள் மற்றும் ஜின்கள்) தவறான முடிவை மேற்கொள்ளப் போகின்றனர் என்பதைக் கடவுள் அறிந்திருந்தார். ஆகையால் தான் படைப்பின் செய்முறைக்குச் சாட்சிகளாவதிலிருந்து அவர்கள் விலக்கி வைக்கப்பட்டனர்.

*18:80 அடால்ஃப் ஹிட்லர் அழகான அப்பாவியாகத் தோற்றமளித்த ஒரு குழந்தையாக இருந்தான். ஒரு குழந்தையாக அவர் மரணித்திருந்தால், ஏராளமானோர் துக்கப்பட்டிருப்பார்கள், மேலும் பலர் கடவுளின் ஞானத்தைக் கூடச் சந்தேகித்திருப்பார்கள். ஆழமான இப்படிப்பினைகள் மூலம் ஒவ்வொன்றிற்கும் பின்னால் தக்கதொரு காரணம் உள்ளது என்பதை நாம் கற்றுக் கொள்கின்றோம்.

*18:94-98 கடவுளின் உடன்படிக்கைத் தூதராக, எனது பணிகளில் ஒன்று, உலக முடிவிற்கு முன்னால் இறுதி அடையாளமான காக் மற்றும் மேகாக் உலக முடிவிற்குச் சரியாக 10 வருடங்கள் முன்னதாக, கி.பி.2270ல் (ஹிஜ்ரி 1700)ல் மீண்டும் தோன்றுவார்கள் என்பதை எடுத்துக் கூறுவதுமாகும். காக் மற்றும் மேகாக், சூரா 18 மற்றும் 21ல் ஒவ்வொரு சூராவின் இறுதியிலிருந்து மிகச்சரியாக 17 வசனங்கள் முன்னதாக, 17 சந்திர நூற்றாண்டுகளை எடுத்துக்காட்டும் விதமாக காணப்படுகின்றனர் என்பதை கவனிக்கவும் (72:27 மற்றும் பின் இணைப்பு 25ஐ பார்க்கவும்).