சூரா21: வேதம் வழங்கப்பட்டவர்கள் (அல்-அன்பியா)
[21:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[21:1] மனிதர்களுக்குரிய கணக்கெடுப்பு விரைந்து வருகின்றது, ஆனால் அவர்கள் கவனமற்றவர் களாக, வெறுப்புற்றவர்களாக இருக்கின்றனர்.

புதிய சான்றுகளுக்கு எதிர்ப்பு

[21:2] புதிதான ஒரு சான்று, அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்களிடம் வரும்போது, அவர்கள் கவனமில்லாமல் அதனைச் செவிமடுக்கின்றார்கள்.
[21:3] அவர்களுடைய மனங்கள் கவனமில்லாமலே இருக்கின்றன. மேலும் வரம்பு மீறுபவர் கள்:“அவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான் அல்லவா? உங்கள் முன் காட்டப்பட்ட அந்த மாயாஜாலத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?”* என்று இரகசிய ஆலோசனை செய்கின்றனர்.
அடிகுறிப்பு

[21:4] அவர், “வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொரு எண்ணத்தையும் என் இரட்சகர் அறிந்திருக்கின்றார். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்.
[21:5] அவர்கள், “பிரமை”, “அவர் இதனை உருவாக்கிக் கொண்டார்” மேலும், “அவர் ஒரு கவிஞர். முந்திய தூதர்களைப் போல ஓர் அற்புதத்தை அவர் காட்டட்டும்” என்று கூட கூறினார்கள்.
[21:6] நம்பிக்கை கொண்ட ஒரு சமூகத்தை கடந்த காலத்தில் நாம் ஒருபோதும் அழித்ததில்லை. இந்த மக்கள் நம்பிக்கை கொண்டவர்களா?
[21:7] நம்மால் உள்ளுணர்வு அளிக்கப்பட்டவர்களாக ஆண்களை அன்றி உமக்கு முன்னர் நாம் அனுப்பவில்லை. உங்களுக்கு தெரியவில்லை யென்றால், வேதத்தை அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
[21:8] உணவு உட்கொள்ளாத உடல்களை அவர்களுக்கு நாம் தரவில்லை, அன்றியும் அவர்கள் மரணமற்றவர்களும் அல்ல.
[21:9] நமது வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; நாம் நாடியோருடன் சேர்த்து அவர்களை நாம் காத்துக் கொண்டோம், மேலும் வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம்.
[21:10] உங்களுடைய செய்தியைக் கொண்டதாக ஒரு வேதத்தை நாம் உமக்கு இறக்கி அனுப்பி இருக்கின்றோம். நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?
[21:11] பல சமூகத்தை அவர்களுடைய வரம்பு மீறல்களின் காரணமாக நாம் முடித்தோம், மேலும் அவர்களுடைய இடத்தில் மற்ற மக்களை நாம் மாற்றியமைத்தோம்.
[21:12] நம்முடைய கைம்மாறு நிகழ்ந்தேற வந்தபோது, அவர்கள் ஓடத் துவங்கினர்.
[21:13] ஓடாதீர்கள், மேலும் உங்களுடைய ஆடம் பரங்களுக்கும் மற்றும் உங்களுடைய மாளிகை களுக்கும் திரும்பி வாருங்கள், ஏனெனில் நீங்கள் கணக்குக் கொடுப்பதற்காகப் பிடிக்கப் பட்டாக வேண்டும்.
[21:14] அவர்கள், “எங்களுக்குக் கேடுதான். நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந் தோம்”என்று கூறினார்கள்.
[21:15] அவர்களை நாம் முற்றிலும் துடைத்தெடுக்கும் வரை, இதுவே அவர்களுடைய பிரகடனமாக இருந்தது.
[21:16] வானங்களையும், பூமியையும் மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், வெறும் கேளிக்கைக்காக நாம் படைக்கவில்லை.
[21:17] நமக்கு கேளிக்கை தேவைப்பட்டிருந்தால், அதனைத்தான் நாம் செய்ய வேண்டும் என்று விரும்பியிருந்தால், இவை எதுவுமின்றி அதனை நம்மால் துவக்கியிருக்க இயலும்.
[21:18] மாறாக, அசத்தியத்திற்கெதிராக அதனைத் தோற்கடிக்கும் பொருட்டு, சத்தியத்திற்கு ஆதரவளிப்பது நம் திட்டமாகும். நீங்கள் கூறும் கூற்றுக்களுக்காக உங்களுக்குக் கேடுதான்.
[21:19] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள், மேலும் அவரிடம் இருப்பவர்கள் ஒருபோதும் அவரை வழிபடுவதை விட்டு மிகவும் ஆணவம் கொள்ள மாட்டார்கள், அன்றி அவர்கள் எப்பொழுதும் தடுமாறவும் மாட்டார்கள்.
[21:20] எப்பொழுதும் சோர்வின்றி, அவர்கள் இரவும் பகலும் துதிப்பார்கள்.

ஒரு கடவுள்

[21:21] படைக்கக்கூடிய தெய்வங்களை பூமியில் அவர்கள் கண்டு விட்டனரா?
[21:22] அவற்றில் (வானங்கள் மற்றும் பூமியில்) கடவுள்-உடன் வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், அங்கே பெருங்கலவரம் தான் இருந்திருக்கும். கடவுள் துதிப்பிற்குரியவர்; பரிபூரணமான அதிகாரத்தையுடைய இரட்சகர். அவர்க ளுடைய கூற்றுக்களுக்கும் மேலாக மிகவும் உயர்வானவர்.

கடவுளின் ஞானத்தை ஒருபோதும் கேள்வி கேட்கக் கூடாது

[21:23] அவர் செய்யும் எதைப்பற்றியும் அவர் ஒருபோதும் கேட்கப்பட மாட்டார், அதே சமயம் மற்ற அனைவரும் கேட்கப்படுவர்.
[21:24] அவருடன் வேறு தெய்வங்களை அவர்கள் கண்டுவிட்டனரா? “உங்கள் சான்றினை காட்டுங்கள். இது முந்திய அனைத்துத் தூதுச் செய்திகளையும் பூரணப்படுத்துகின்ற, என் தலைமுறையினருக்கான தூதுச் செய்தியாகும்” என்று கூறுவீராக. உண்மையில், அவர்களில் அதிகமானோர் சத்தியத்தை அடையாளம் கண்டு கொள்வதில்லை; இதனால் தான் அவர்கள் அவ்வளவு விரோதத்துடன் இருக்கின்றார்கள்.

ஒரே கடவுள் / ஒரே தூதுச் செய்தி / ஒரே மார்க்கம்

[21:25] நாம் உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் : “என்னைத்தவிர தெய்வம் இல்லை; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்” என்ற உள்ளுணர்வுடனே தவிர அனுப்பியதில்லை.
[21:26] இருப்பினும், அவர்கள், “மிக்க அருளாளர் ஒரு மகனைப் பெற்றெடுத்திருக்கின்றார்!” என்று கூறினார்கள். துதிப்பு அவருக்குரியவை. அனைத்து (தூதர்களும்) (அவருடைய) கண்ணியமான அடியார்களே ஆவர்.
[21:27] அவர்கள் ஒருபோதும் சுயமாகப் பேச மாட்டார்கள், மேலும் தங்கள் இரட்சகரின் கட்டளைகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவார் கள்.

பரிந்துரை எனும் கட்டுக்கதை

[21:28] அவர்களுடைய எதிர்காலத்தையும் மேலும் அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். முன்னரே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டவர்களுக்கே அன்றி, அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள், மேலும் அவர்கள் தங்களைப் பற்றியே* கவலையுற்றவர்களாக இருக்கின்றனர்.
அடிகுறிப்பு

[21:29] அவருடன் ஒரு தெய்வமாக இருப்பதாக அவர்களில் எவரேனும் ஒருவர் கூறினால் நாம் நரகத்தைக் கொண்டு அவருக்குக் கூலி கொடுப்போம்; இவ்விதமாகவே தீயவர்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.

பெருவெடிப்புக் கொள்கை உறுதிப்படுத்தப்படுகின்றது*

[21:30] வானமும், பூமியும் முன்பு ஒரே திடப்பொருளாக இருந்ததை, வாழ்க்கை நிலைக்குக் கொண்டு வர நாம் வெடிக்கச் செய்தோம் என்பதை நம்ப மறுப்பவர்கள் விளங்கிக் கொள்ளவில்லையா? மேலும் அனைத்து உயிரினங்களையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?
அடிகுறிப்பு

[21:31] மேலும் அவர்களோடு சேர்ந்து பூமி உருண்டு விடாதிருக்கும் பொருட்டு, அதன் மீது நிலைப்படுத்துபவைகளை நாம் அமைத்தோம், மேலும் அவர்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, நேரான நெடுஞ்சாலைகளை அதில் நாம் அமைத்தோம்.
[21:32] மேலும் பாதுகாக்கப்பட்ட ஒரு மேற்கூரையாக வானத்தை நாம் ஆக்கினோம். ஆயினும், அவற்றில் உள்ள அறிகுறிகள் அனைத்திலும் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின் றனர்.
[21:33] மேலும் அவர்தான் இரவையும், பகலையும் மேலும் சூரியனையும், சந்திரனையும் படைத்தவர்; ஒவ்வொன்றும் அதற்குரிய சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருக் கின்றன.
[21:34] மரணமற்ற நிலையை உமக்கு முன்னர் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் நாம் விதித்ததில்லை; நீர் இறந்து போக நேரிடுமென்றால், அவர்கள் மட்டும் சாகாதிருப்பவர்களா?
[21:35] கஷ்டங்களும் மற்றும் வளமும் கொண்டு உங்களை நாம் சோதனையில் ஆழ்த்திய பின்னர், ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், பின்னர் நீங்கள் நம்மிடமே இறுதியில் திரும்புவீர்கள்.

தூதர்கள் அனைவரும் பரிகசிக்கப்பட்டனர்

[21:36] நம்ப மறுப்பவர்கள் உம்மைக் காணும்போது, “இவர்தான் உங்கள் தெய்வங்களுக்குச் சவால் விடுபவரா?” என்று உம்மைப் பரிகசிக்கி ன்றனர். இதற்கிடையில், மிக்க அருளாளரி டமிருந்துள்ள தூதுச்செய்தி குறித்து அவர்கள் முற்றிலும் கவனமில்லாமல் இருக்கின்றனர்.
[21:37] இயல்பில் மனிதன் பொறுமையற்றவனாகவே இருக்கின்றான். தவிர்த்து விட முடியாதவாறு எனது அத்தாட்சிகளை நான் உங்களுக்குக் காட்டுவேன்; இப்படி அவசரப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.
[21:38] அவர்கள்: “நீர் உண்மையாளராக இருந்தால், (அத்தண்டனை) எங்கே?” என்று சவால் விடுகின்றனர்.
[21:39] நெருப்பிலிருந்து தங்களைத் தடுத்து விலக்கிக் கொள்ள முயற்சிக்கும் அந்நேரத்தை மட்டும் நம்ப மறுப்பவர்கள் நினைத்துப் பார்க்க முடிந்தால்; அவர்களுடைய முகங்களுக்கும் மற்றும் அவர்களுடைய முதுகுகளுக்கும் அப்பால்! அப்போது அவர்களுக்கு எவரும் உதவி செய்ய மாட்டார்.
[21:40] உண்மையில், அவர்களிடம் அது திடீரென வரும், மேலும், அவர்கள் முற்றிலும் திகைப் படைந்து விடுவார்கள். அவர்கள் அதனைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியாது, அன்றியும் அவர்கள் அவகாசம் எதுவும் பெற்றுக் கொள்ளவும் முடியாது.
[21:41] உமக்கு முன்னரும் தூதர்கள் பரிகசிக்கப் பட்டிருக்கின்றனர், மேலும், அதன் விளைவாக, அவர்களைப் பரிகசித்தவர்கள் அவர்களுடைய பரிகசிப்பிற்கான தண்டனைக்கு உள் ளானார்கள்.

முன்னுரிமைகள் குழம்பி விட்டன

[21:42] “இரவிலோ அல்லது பகலிலோ மிக்க அருளாளரிடமிருந்து உங்களைக் காக்க எவரால் இயலும்?” என்று கூறுவீராக. உண்மையில், தங்கள் இரட்சகரின் தூதுச் செய்தியில் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின்றனர்.
[21:43] நம்மிடமிருந்து அவர்களைக் காக்கக்கூடிய தெய்வங்களை அவர்கள் வைத்திருக்கின்றனரா? அவர்கள் தங்களுக்கே கூட உதவி செய்து கொள்ள முடியாது. அன்றி நம்மைச் சந்திக்க அழைக்கப்படும் போது அவர்கள் ஒருவர் மற்றவருடன் சேர்ந்து வரவும் முடியாது.
[21:44] இந்த மக்களுக்கும் மேலும் இவர்களுடைய முன்னோர்களுக்கும், முதிர்ந்ததொரு வயது முடியும் வரை நாம் வழங்கி உள்ளோம். பூமியின் மீது ஒவ்வொரு நாளும், அவர்களை முடிவை நோக்கி நெருக்கிக் கொண்டு வருவதை அவர்கள் காணவில்லையா? இந்த நடைமுறையை அவர்களால் தலைகீழாக மாற்றிவிட முடியுமா?
[21:45] “நான் தெய்வீக உள்ளுணர்விற்கு இணங்க உங்களை எச்சரிக்கின்றேன்” என்று கூறுவீராக. ஆயினும், தாங்கள் எச்சரிக்கப்படும் பொழுது, செவிடர்களால் அழைப்பைச் செவியேற்க இயலாது.
[21:46] உம் இரட்சகருடைய தண்டனையின் மாதிரிகளில் ஒன்று அவர்களைத் துன்புறுத்தும் போது, உடனடியாக அவர்கள், “ நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந்தோம்” என்று கூறு கின்றார்கள்.
[21:47] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று நீதியின் தராசுகளை நாம் நிறுவுவோம். எந்த ஆன்மாவும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்காது. ஒரு கடுகின் வித்திற்குச் சமமானதும் கூட, கணக்கில் கொள்ளப்படும். நாமே மிகவும் திறன்வாய்ந்த கணக்காளர்கள் ஆவோம்.

வேதம் வழங்கப்பட்டவர்களான மோஸஸும் ஆரோனும்

[21:48] நாம் மோஸஸிற்கும், ஆரோனிற்கும் சட்டப் புத்தகத்தைத் தந்தோம், ஒரு வழிகாட்டி, மேலும் நன்னெறியாளர்களுக்கொரு நினைவூட்டல்.
[21:49] தங்களுடைய தனிமையில் அவர்கள் தனித்திருக்கும் பொழுதில் கூட, தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடு இருப்பவர்கள், மேலும் அந்த நேரத்தைக் குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர்.
[21:50] இதுவும் கூட நாம் இறக்கி அனுப்பிய அருள்பாலிக்கப்பட்ட ஒரு நினைவூட்டல் ஆகும். இதனையா நீங்கள் மறுக்கின்றீர்கள்?

ஆப்ரஹாம்

[21:51] அதற்கு முன்னர், ஆப்ரஹாமிற்கு, அவருடைய வழிகாட்டுதலையும் மேலும் புரிந்துகொள்ளு தலையும் நாம் கொடுத்தோம், ஏனெனில் அவரைப்பற்றி நாம் முற்றிலும் அறிந்திருந் தோம்*.
அடிகுறிப்பு

[21:52] அவர் தன் தந்தையிடமும் மற்றும் தன் சமூகத்தாரிடமும், “உங்களையே நீங்கள் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இந்த சிலைகள் யாவை?” என்று கூறினார்.
[21:53] அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் அவற்றை வழிபட்டுக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
[21:54] அவர், “உண்மையில், நீங்களும், உங்கள் பெற்றோர்களும் முற்றிலும் வழிதவறிச் சென்று விட்டீர்கள்” என்று கூறினார்.
[21:55] அவர்கள், “நீர் எங்களிடம் உண்மையைக் கூறுகின்றீரா, அல்லது நீர் விளையாடு கின்றீரா?” என்று கூறினார்கள்.
[21:56] அவர் கூறினார், “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த, அவற்றின் இரட்சகர்தான் உங்க ளுடைய ஒரே இரட்சகர் ஆவார். இதுவே நான் சாட்சியம் அளிக்கின்ற உறுதி மொழி ஆகும்.
[21:57] “நான் கடவுள் மீது ஆணையிடுகின்றேன், நீங்கள் சென்ற உடன், உங்களுடைய சிலைகளைக் கவனித்துக் கொள்ளும் ஒரு திட்டம் என்னிடம் இருக்கின்றது”
[21:58] அவர் அவற்றைத் துண்டுகளாக உடைத்து விட்டார், பெரியதான ஒன்றைத் தவிர, அவர்கள் அதனிடம் ஆலோசிக்கும் பொருட்டு.
[21:59] அவர்கள், “நம்முடைய தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் எவராயினும் அவர் உண்மையில் ஒரு வரம்பு மீறியவர்தான்” என்று கூறினார்கள்.
[21:60] அவர்கள், “ஓர் இளைஞர் அவற்றை மிரட்டிக் கொண்டிருந்ததாக நாங்கள் கேள்விப்பட்டோம்; அவர் ஆப்ரஹாம் என்று அழைக்கப் படுகின்றார்” என்று கூறினார்கள்.
[21:61] அவர்கள், “மக்கள் அனைவருடைய கண் களின் எதிரே, அவர்கள் சாட்சியம் அளிக்கும் பொருட்டு, அவரைக் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்கள்.
[21:62] அவர்கள், “எங்கள் தெய்வங்களுக்கு இதனைச் செய்தவர் நீர்தானா, ஆப்ரஹாமே?” என்று கூறினார்கள்.

ஆப்ரஹாம் தன் நோக்கத்தை நிரூபிக்கின்றார்

[21:63] அவர், “அதோ அந்தப் பெரிய ஒன்றுதான் அதனைச் செய்தது. அவற்றால் பேசமுடியு மாயின், சென்று அவற்றைக் கேட்டுப் பாருங்கள்” என்று கூறினார்.
[21:64] அவர்கள் பின்வாங்கியவர்களாக, மேலும் தங்களுக்குள்ளேயே, “உண்மையில், நீங்கள் தான் வரம்பு மீறிக் கொண்டிருந்தீர்கள்” என்று கூறிக்கொண்டார்கள்.
[21:65] இருப்பினும், தங்களுடைய பழைய எண்ணங் களுக்கே திரும்பிச் சென்று விட்டனர்: “இவற்றால் பேச முடியாது என்பதை நீர் முற்றிலும் நன்கறிவீர்”.
[21:66] அவர் கூறினார், “அப்படியென்றால் கடவுள் - ஐத் தவிர உங்களுக்குப் பயனளிக்கவோ அல்லது தீங்கிழைக்கவோ சக்தியற்றவைகளை நீங்கள் வழிபடுவீர்களா?
[21:67] “கடவுள்-உடன் சிலைகளை வழிபடுவதன் மூலம் நீங்கள் இழிவிற்குள்ளாகி விட்டீர்கள். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?”

ஆழ்ந்த அற்புதம்

[21:68] அவர்கள், “இதைத்தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால், அவரை எரித்து விடுங்கள் மேலும் உங்கள் தெய்வங்களுக்கு ஆதரவளியுங்கள்” என்று கூறினார்கள்.
[21:69] நாம், “நெருப்பே, ஆப்ரஹாமிற்குக் குளிர்ச்சி யாகவும் மேலும் பாதுகாப்பாகவும் ஆகிவிடு*” என்று கூறினோம்.
அடிகுறிப்பு

[21:70] இவ்விதமாக, அவருக்கெதிராக அவர்கள் சூழ்ச்சிசெய்தனர், ஆனால் நாம் அவர்களைத் தோல்வியடைந்தவர்களாக ஆக்கி விட்டோம்.
[21:71] நாம் அவரைக் காப்பாற்றினோம், மேலும் எல்லா மக்களுக்காகவும் நாம் அருள்புரிந்த நிலப்பரப்பிற்கு லோத்தை நாம் காப்பாற்றி னோம்.
[21:72] மேலும் ஐசக்கையும் மற்றும் ஜேக்கபையும் ஒரு பரிசாக நாம் அவருக்களித்தோம், மேலும் அவர்கள் இருவரையும் நன்னெறியாளர்களாக நாம் ஆக்கினோம்.

ஆப்ரஹாம்: இஸ்லாத்தின் (அடிபணிதல்) மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சேர்ப்பித்தவர்

[21:73] நம்முடைய கட்டளைகளுக்கு இணங்க வழி நடத்திய இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம், மேலும் நன்னெறியான செயல்கள் செய்வது எப்படி என்பதையும், தொடர்புத் தொழுகைகளையும் (ஸலாத்) மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்)* கடைப்பிடிப்பது எப்படி என்பதையும் நாம் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். நமக்கு, அர்ப்பணித்துக் கொண்ட வணக்கசாலிகளாக அவர்கள் இருந்தனர்.
அடிகுறிப்பு

லோத்

[21:74] லோத்தைப் பொறுத்த வரை, அவருக்கு நாம் ஞானத்தையும், அறிவையும் அளித்தோம், மேலும் வெறுக்கத்தக்கவற்றைச் செயல்படுத்தி வந்த சமூகத்திடமிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம்; அவர்கள் மிகக் கெட்டவர்களாகவும், மேலும் பாவிகளாகவும் இருந்தனர்.
[21:75] நமது கருணைக்குள் நாம் அவரை அனுமதித்தோம், ஏனெனில் அவர் நன்னெறியாளராக இருந்தார்.

நோவா

[21:76] மேலும், அதற்கு முன்னர், நோவா அழைத்தார் மேலும் நாம் அவருக்கு பதிலளித்தோம். அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெரும் நாசத்திலிருந்து நாம் காத்தோம்.
[21:77] நமது வெளிப்பாடுகளை ஏற்க மறுத்துவிட்ட மக்களுக்கு எதிராக, அவருக்கு நாம் ஆதர வளித்தோம். அவர்கள் பாவிகளாக இருந்தனர், எனவே அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

டேவிட்டும், ஸாலமனும்

[21:78] மேலும் டேவிட்டும், ஸாலமனும், ஒருவருடைய பயிரை மற்றவருடைய செம்மறியாடு அழித்துவிட்டது சம்பந்தமாக ஒருமுறை அவர்கள் தீர்ப்பளித்த போது. அவர்களுடைய தீர்ப்பை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
[21:79] அவர்கள் இருவருக்கும் ஞானத்தையும் மற்றும் அறிவையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சரியான புரிந்து கொள்ளுதலை ஸாலமனுக்கு நாம் அளித்தோம். (கடவுளைத்) துதிப்பதில் டேவிட்டிற்கு பணிசெய்யுமாறு மலைகளையும், அவ்வாறே பறவைகளையும் நாம் பணித்தோம். இதுதான் நாம் செய்தது.
[21:80] மேலும் போர்களில் உங்களைக் காத்துக் கொள்ள கேடயங்கள் செய்யும் கலையையும் அவருக்கு நாம் கற்றுத்தந்தோம். அப்பொழு தேனும் நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கின்றீர்களா?
[21:81] ஸாலமனுக்காக, காற்றை அவருடைய கட்டுப்பாட்டில் வீசிக் கொண்டும் மேலும் அடித்துக் கொண்டும் இருக்கப் பணித்தோம். அவர் விரும்பியவாறு, அவர் தேர்ந்தெடுத்த எந்த நிலப்பரப்பிற்கும் அதனைச் செலுத்த அவரால் முடிந்தது, மேலும் அத்தகைய நிலங்களை அவருக்காக நாம் அருள்புரிந் தோம்.அனைத்து விஷயங்களையும் நாம் முற்றிலும் அறிந்தே இருக்கின்றோம்.
[21:82] மேலும் சாத்தான்களில் (கடலில் அறுவடை செய்வதற்கென) அவருக்காக மூழ்கக் கூடியவை, அல்லது அவர் கட்டளையிடும் வேறு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடியவை இருந்தன. அவருடைய சேவைக்கென அவற்றை நாம் பணித்தோம்.

ஜோப்

[21:83] மேலும் ஜோப் தன் இரட்சகரை: “எனக்குக் கஷ்டங்கள் ஏற்பட்டு விட்டன; மேலும், கருணை யுடையவர்கள் அனைவரிலும், நீரே மிக்க கருணையாளர்” என்று இறைஞ்சிப் பிரார்த் தித்தார்.
[21:84] நாம் அவருக்கு பதிலளித்து, அவருடைய கஷ்டங்களை நிவர்த்தித்தோம், மேலும் அவருடைய குடும்பத்தை, இன்னும் இருமடங் காக அதிகரித்து அவருக்கு திருப்பித் தந்தோம். அது நம்மிடமிருந்து ஒரு கருணையாகவும், மேலும் வழிபடுவோருக் கொரு நினைவூட்டலாகவும் இருந்தது.
[21:85] இன்னும் இஸ்மவேல், இத்ரீஸ், ஜல்-கிஃப்ல்; அனைவரும் உறுதியோடு, பொறுமையோடு இருந்தனர்.
[21:86] நமது கருணைக்குள் நாம் அவர்களை அனுமதித்தோம், ஏனெனில் அவர்கள் நன்னெறியாளர்களாக இருந்தார்கள்.

ஜோனா

[21:87] மேலும் ஜன்-நூன் (ஜோனா, “தனது பெயரில் ஒரு “ந” வைக் கொண்டவர்)”, நாம் அவரைக் கட்டுப்படுத்த முடியாது என்றெண்ணிக் கொண்டு, ஆட்சேபணையுடன் தன் இறைப் பணியைக் கை விட்டார். அவர் (பெரிய மீனின் வயிற்றின்) இருளிலிருந்து: “உம்மை விடுத்து வேறு தெய்வம் இல்லை. நீர் துதிப்பிற்குரியவர். நான் ஒரு பெரும்பாவத்தைச் செய்து விட்டேன்” என்று இறைஞ்சிப் பிரார்த்திப் பவராக முடிந்தார்.
[21:88] நாம் அவருக்குப் பதிலளித்து, அந்த ஆபத்தான நிலையிலிருந்து அவரைக் காத்தோம்; இவ்விதமாகவே நம்பிக்கையாளர்களை நாம் காப்போம்.

ஜக்கரியாவும், ஜானும்

[21:89] மேலும் ஜக்கரியா தன் இரட்சகரை: “என் இரட்சகரே, நீரே சிறந்த வாரிசாக இருக்கும் போதிலும், வாரிசு இல்லாமல் என்னை ஆக்கி விடாதீர்” என்று இறைஞ்சிப் பிரார்த்தித்தார்.
[21:90] நாம்* அவருக்கு பதிலளித்தோம் மேலும் அவருக்கு ஜானை அளித்தோம்; அவருக்காக அவருடைய மனைவியை நாம் சரிப்படுத்தினோம். அது ஏனெனில் அவர்கள் நன்னெறிகளைச் செய்ய விரைபவர்களாகவும், மேலும் இன்பமான சூழ்நிலைகளிலும், அவ்வாறே அச்சத்திலும் நம்மை இறைஞ்சிப் பிரார்த்திப் பவர்களாகவும் இருந்தனர். நம்மிடம், பயபக்தியுடையவர்களாக அவர்கள் இருந்தனர்.
அடிகுறிப்பு

மேரியும், இயேசுவும்

[21:91] தனது கன்னித்தன்மையைக் காத்துக் கொண்டவரைப் பொறுத்த வரை, நம்முடைய ஆவியிலிருந்து அவருக்குள் நாம் ஊதினோம், மேலும் இவ்விதமாக அவரையும், அவருடைய மகனையும் அகிலம் முழுமைக்கும் ஓர் அறிகுறியாகவும் நாம் ஆக்கினோம்.

ஒரு கடவுள் / ஒரு மார்க்கம்

[21:92] உங்களுடைய கூட்டம் ஒரே கூட்டமே தவிர வேறில்லை, மேலும் நான் மட்டுமே உங்களுடைய இரட்சகர்; நீங்கள் என்னை மட்டுமே வழிபட வேண்டும்.
[21:93] ஆயினும், தர்க்கித்துக் கொள்ளும் மார்க்கங் களாக அவர்கள் தங்களைப் பிரித்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் (தீர்ப்பளிக்கப்படுவதற்காக) நம்மிடமே திரும்பி வருவார்கள்.
[21:94] நம்பிக்கை கொண்ட நிலையில், நன்னெறியான செயல்களைச் செய்வோரைப் பொறுத்தவரை, அவர்களுடைய உழைப்பு வீணாகப் போகாது; அதனை நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம்.
[21:95] நாம் அழித்துவிட்ட எந்தச் சமூகமும் திரும்பி வருவது தடுக்கப்பட்டுள்ளது.

உலகத்தின் முடிவு*

[21:96] காக் மற்றும் மேகாக் திரும்பத் தோன்றும் வரை*, அவர்கள் திரும்பி வரும்போது - அவர்கள் ஒவ்வொரு திசையிலிருந்தும் வருவார்கள்.
அடிகுறிப்பு

[21:97] அப்போதுதான் தவிர்த்து விட முடியாத அந்த முன்னறிவிப்பு நிகழ்ந்தேறும், மேலும் நம்ப மறுப்பவர்கள் திகிலில் நிலைகுத்தி விடுவார்கள்: “எங்களுக்குக் கேடுதான்; நாங்கள் கவனமற்ற வர்களாகவே இருந்தோம். உண்மையில், நாங்கள் தீயவர்களாகவே இருந்தோம்”.

மறுவுலகம்

[21:98] நீங்களும் கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபடும் இணைத்தெய்வங்களும் நரகத்திற்கு எரிபொருளாவீர்கள்; இதுவே தவிர்த்துவிட முடியாத உங்களுடைய விதியாகும்.
[21:99] அவைகள் தெய்வங்களாக இருந்திருந்தால், அவை நரகம் சென்று சேர்ந்திருக்காது. அதில் வசிப்பவர்கள் அனைவரும் அங்கே நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.
[21:100] அங்கே அவர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மேலும் முனகிக் கொண்டும் இருப்பார்கள். மேலும் எந்தச் செய்தியையும் அவர்கள் அடைந்து கொள்ள முடியாது.
[21:101] நமது மகத்தான வெகுமதிகளுக்குத் தகுதியானவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

நன்னெறியாளர்கள்

[21:102] அதன் சீற்றத்தை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் விரும்பக் கூடிய அனைத்தும் நிரந்தரமாகக் கிடைக்கக்கூடிய ஒரு வசிப்பிடத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.
[21:103] மாபெரும் திகில் அவர்களைக் கவலைக் குள்ளாக்காது, மேலும் வானவர்கள் அவர் களை: “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட, உங்களுடைய நாள் ஆகும்” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள்

[21:104] அந்நாளில், ஒரு புத்தகத்தை மடக்குவதைப் போல், வானத்தை நாம் மடக்கி விடுவோம். முதல் படைப்பை நாம் துவக்கியதுபோல், அதனை நாம் மீண்டும் செய்வோம். இது நமது வாக்குறுதியாகும்; நிச்சயமாக அதனை நாம் நிறைவேற்றுவோம்.
[21:105] சங்கீதத்திலும், அவ்வாறே மற்ற வேதங் களிலும், பூமியானது என்னுடைய நன்னெறியாளர்களான வணக்கசாலிகளால் வாரிசுரிமை கொள்ளப்பட வேண்டும் என நாம் விதித்துள்ளோம்.
[21:106] வணக்கசாலிகளாக இருக்கின்ற மக்களுக்கு இது ஒரு பிரகடனமாகும்.
[21:107] முழு உலகிற்கும் நம்மிடமிருந்துள்ள கருணை யின் வெளிப்பாடாகவே உம்மை நாம் அனுப்பியுள்ளோம்.
[21:108] “உங்கள் தெய்வம் ஒரே தெய்வம் என நான் தெய்வீக உள்ளுணர்வளிக்கப்பட்டுள்ளேன். எனவே நீங்கள் அடிபணிவீர்களா?” என்று பிரகடனம் செய்வீராக.
[21:109] அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், அப்போது கூறுவீராக, “நான் போதுமான அளவு உங்களை எச்சரித்து விட்டேன், மேலும் எவ்வளவு விரைவாக அல்லது தாமதமாக (அத்தண் டனை) உங்களிடம் வரும் என்பது எனக்குத் தெரியாது.
[21:110] “அவர் உங்களுடைய பகிரங்கமான கூற்றுக் களை முற்றிலும் அறிந்திருக்கின்றார், மேலும் நீங்கள் மறைத்து வைக்கும் அனைத்தையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[21:111] “நான் அறிந்திருப்பதெல்லாம், இந்த உலகம் உங்களுக்கு ஒரு சோதனையாகவும், மேலும் ஒரு தற்காலிகமான சந்தோஷமாகவும் இருக்கின்றது என்பதேயாகும்”.
[21:112] “என் இரட்சகரே, உமது தீர்ப்பே பரிபூரணமான நீதியாகும். எங்கள் இரட்சகர்தான் மிக்க அருளாளர்; உங்களுடைய கூற்றுக்களுக்கு எதிராகத் தேடப்படுவது அவருடைய உதவி மட்டுமே” என்று கூறுவீராக.