சூரா 2க்குரிய அடிக்குறிப்புகள்

*2:1 இந்த தலைப்பு எழுத்துக்கள் 1400 வருடங்களாக, தெய்வீகமாக பாதுகாக்கப்பட்டதோர் இரகசியமாக இருந்தன. இவற்றை குர்ஆனுடைய கணித ரீதியிலான அற்புதத்தின் முக்கியமானதோர் அங்கம் என இப்போது நாம் அடையாளம் காண்கின்றோம்(பின் இணைப்பு 1, 2, 24 மற்றும் 26ஐப் பார்க்கவும்). அ.ல.ம. என்பதன் பொருளாக, “இந்த வேதம் தவறிழைக்காதது” என்று வசனம் 2ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று தலைப்பு எழுத்துக்களும், இந்த சூராவில் முறையே 4502, 3202 மற்றும் 2195 முறை இடம்பெற்றுள்ளன என்ற உண்மையின் மூலமாக, இது மறுக்கஇயலாதபடி நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களின் கூட்டுத் தொகை 9899, அல்லது 19 ஓ 521 ஆகும். இவ்விதமாக, அரபி மொழியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் இந்த எழுத்துக்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் ஒரு கணித அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதே தலைப்பு எழுத்துக்கள் 3, 29, 30, 31 மற்றும் 32 ஆகிய சூராக்களிலும் முற்சேர்க்கையாக உள்ளன. மேலும் இந்த சூராக்கள் ஒவ்வொன்றிலும் அவை இடம்பெறுகின்ற எண்ணிக்கையின் கூட்டுத் தொகை 19ன் பெருக்குத் தொகையாகவே உள்ளன.

*2:3 தொடர்புத் தொழுகைகள் ஒரு நாளைக்கு ஐந்து வேளைகள் என்று கட்டளையிடப்பட்டிருப்பதால், அவை நம் ஆன்மாவின் ஊட்டத்திற்கான முக்கியமான மூலகாரணமாக இருக்கின்றன. அடிபணிதலின் மற்ற அனைத்துச் செயல் பாடுகளுடன், தொடர்புத்தொழுகைகளும் முதன் முதலில் ஆப்ரஹாமின் மூலமே வெளிப்படுத்தப்பட்டது (21:73, 22:78). இந்த தினசரி ஐந்து தொடர்புத் தொழுகைகளும் குர்ஆனின் வெளிப்பாட்டிற்கு முன்னரே நடைமுறையில் இருந்து வந்த போதிலும், ஒவ்வொரு தொடர்புத் தொழுகையும் குர்ஆனில் பிரத்யேகமாக குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது (24:58, 11:114, 17:78 & 2:238). ஒவ்வொரு தொழுகையின் பிரிவுகளின் (ரகஅத்கள்) எண்ணிக்கை, குனிதல், சிரம்பணிதல், மற்றும் தஷஹ்ஹுத்கள் உட்பட, தொடர்புத் தொழுகைகளின் அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்துகின்ற கண்கூடான ஆதாரத்தை பின் இணைப்புகள் 1 & 15 வழங்குகின்றன.

**2:3 கடவுள் பன்மைப் பதத்தைப் பயன்படுத்துகின்றபோது, அது வழக்கமாக வானவர்கள் உட்பட்டிருக்கின்றார்கள் போன்ற மற்றவர்களை குறிக்கின்றது. கடவுள் மோஸஸிடம் பேசியபோது, ஒருமை வடிவமே பயன்படுத்தப்பட்டது (20:12-24). பின் இணைப்பு 10ஐ பார்க்கவும்.

*2:4 முந்திய வேதங்கள் கடுமையாக சிதைக்கப்பட்டிருந்தாலும், கடவுளின் சத்தியத்தை இன்னமும் அவற்றில் காணமுடிகின்றது. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகிய இரண்டும், இன்னமும் கடவுளுக்கு மட்டுமேயான பரிபூரண அர்ப்பணிப்பை ஆதரிக்கின்றன (உபாகமம் 6:4-5, மார்க் 12:29-30). எல்லாச்சிதைவுகளும் எளிதில் கண்டு பிடிக்ககூடியவைகளாகவே உள்ளன.

*2:6-7 கடவுளை ஏற்றுக்கொள்ள மறுப்பது என்ற முடிவை எடுப்போருக்கு அத்திசையில் உதவி செய்யப்படுகின்றது. இத்தகையதொரு முடிவில் அவர்கள் நிலைத்திருக்கும் வரை எந்தச் சான்றையோ அல்லது வழிகாட்டலையோ காண்பதைவிட்டும் அவர்கள் கடவுளால் தடுக்கப்படுகின்றனர். பேரழிவை ஏற்படுத்தும் இத்தகையதொரு முடிவின் விளைவுகள் வசனம் 7ல் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

*2:20 அரபிமொழியில் “அவர்” மற்றும் “அவள்” என்பன பால் வகையைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை (பின் இணைப்பு 4).

*2:23 -24 இங்கே குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் அடியார் ‘ரஷாத் கலீஃபா’ எனும் பெயர் கொண்டவர் என்பதற்கான ஏராளமான சான்றுகளை குர்ஆனின் அற்புதமான கணிதக் குறியீடு அளிக்கின்றது. அல்-முதனப்பி, மற்றும் தாஹாஹுசைன் உட்பட சில இலக்கிய ஜாம்பவான்கள், இலக்கிய ரீதியான அறை கூவலுக்குப் பதிலளித்துள்ளனர், ஆனால் குர்ஆனின் கணிதக் கட்டமைப்புக் குறித்து அவர்கள் எதுவும் அறியாவர்களாக இருந்தனர். கடவுளின் உடன்படிக்கைத்தூதர் ரஷாத் கலீஃபா மூலம் வெளிப்படுத்தப்பட்ட குர்ஆனின் கணிதக் குறீயீடுதான் உண்மையான அறைகூவல் - ஏனெனில் இது ஒரு போதும் போலியாகத் தயாரிக்க இயலாதது. விபரமான சான்றுகளுக்குப் பின் இணைப்பு 1,2,24, & 26 ஐப் பார்க்கவும்.

*2:26 சுவனம் மற்றும் நரகம் குறித்த கூடுதலான ஆய்வுரைக்கு பின் இணைப்பு 5ஐப் பார்க்கவும்.

*2:28 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை, அவர்கள் நேராக சுவனத்திற்குச் செல்கின்றனர், இந்தப் பூமியின் மீது அவர்களுடைய காலத்தவணை முடிவிற்கு வரும் பொழுது, மரணத்தின் வானவர்கள், முன்னொரு காலத்தில் ஆதாமும், ஏவாளும் வசித்த அதே சுவனத்திற்குச் செல்வதற்கு அவர்களை வரவேற்கின்றனர், அவ்வளவுதான் (2:154, 3:169, 8:24, 22:58, 16:32, 36:20-27, 44:56,89:27-30). இவ்விதமாக, நம்முடைய அசலான பாவத்தைத் தொடர்ந்த முதல் மரணத்தை மட்டுமே நன்னெறியாளர்கள் அனுபவிக்கும் அதேசமயம், நன்னெறியற்றவர்கள் இருமுறை மரணத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர் (40:11) மரணத் தருவாயின் போது, நம்ப மறுப்பவர்கள் தங்களுடைய துன்பகரமான விதியை அறிந்து கொள்கின்றனர் ( 8:50, 47:27), பின்னர் அவர்கள் நரகம் படைக்கப்படும் வரை நிலைத்திருக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தும் துர்க்கனவுகளால் துன்புறுகின்றனர் (40:46, 89:23, பின் இணைப்பு 17).

* 2:29 நூறு கோடி நட்சத்திர மண்டலங்களையும், பல நூறு கோடி ஒளி வருடங்கள் பயணிக்கின்ற அளவிற்கு விரிந்திருக்கும் துரங்களையும் கொண்ட நமது பிரபஞ்சம்தான் ஏழு பிரபஞ்சங்களில் மிகச் சிறியதும் மேலும் உள்ளடங்கியதும் ஆகும் (பின்இணைப்பு 6). 41:10-11ஐ தயவு செய்து பார்க்கவும்.

*2:30-37 நாம் ஏன் இங்கே இருக்கின்றோம்? என்பன போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கு இவ்வசனங்கள் விடையளிக்கின்றன (பின் இணைப்பு 7 ஐப் பார்க்கவும்).

*2:31 இப்பெயர்களாவன, விலங்குகள், தானியங்கி வாகனங்கள், நீர் மூழ்கிக்கப்பல்கள், செயற்கைக் கோள், வீடியோ இன்னும் பூமியில் மனிதர்கள் சந்திக்கவிருக்கும் மற்ற அனைத்துப் பொருட்களின் பெயர்கள் ஆகும்.

*2:37 இவ்வாறே, தன்னுடன் தொடர்பை நிலைப்படுத்திக் கொள்ள பிரத்யேகமாக, கணிதரீதியில் குறியீடு செய்யப்பட்ட வார்த்தைகளான, சூரா 1-ன் வார்த்தைகளைக் கடவுள் நமக்குத் தந்திருக்கின்றார் (அடிக்குறிப்பு 1:1 மற்றும் பின் இணைப்பு 15ஐப் பார்க்கவும்).

*2.51 இச்சம்பவம் மனிதர்களின் இணைத்தெய்வ வழிபாட்டு மனோபாவத்தைப் பிரதிபலிக்கின்றது. ஆழ்ந்த அற்புதங்களுக்குப் பின்னரும் மோஸஸைப் பின்பற்றியவர்கள் அவர் இல்லாத போது கன்றுக்குட்டியை வழிபட்டனர், மேலும் மோஸஸிற்கு மிஞ்சியது இரண்டு நம்பிக்கையாளர்கள் மட்டுமே (5:23). அறிமுகவுரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, தங்கள் அகந்தைகளைக் கடவுளாகக் கொண்ட கலகக்காரர்கள் தான் மனிதர்கள்.

*2:54 அகந்தைதான் சாத்தானின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. அகந்தைதான் நாம் இவ்வுலகிற்கு வெளியேற்றப்படக் காரணமாக இருந்தது, மேலும் அகந்தை தான் நம்மில் பெரும்பாலோர் கடவுளின் சாம்ராஜ்ஜியத்திற்குள் மீட்டுக்கொள்ளப்படுவதற்குத் தடையாக உள்ளது.

*2:55 இவ்வசனத்தில் கடவுள் என்ற வார்த்தை 19வது முறையாக இடம் பெறுவது கவனிக்கத்தக்கது. மேலும் இவ்வசனத்தில் தான் மக்கள் “ கண்கூடான ஆதாரம்” வேண்டுமென்று கேட்கின்றனர். 19ன் அடிப்படையில் அமைக்கப்பட்ட குர்ஆனின் கணிதக் குறியீடு இத்தகைய கண்கூடான ஆதாரத்தை வழங்குகின்றது. 2+55=57=19 X 3 என்பதையும் கவனிக்கவும்.

*2:67 இந்த சூரா தொடர்புத் தொழுகைகள், நோன்பு, ஹஜ்புனிதயாத்திரை, திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டங்கள் உட்பட முக்கியச் சட்டங்களையும், கட்டளைகளையும் தன்னுள் கொண்டிருந்த போதிலும் இந்த சூராவிற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் “பசுங்கன்று “ ஆகும். இது கடவுளை அடிபணிவதின் முக்கியத்துவத்தையும் , நம் படைப்பாளருக்கு உடனடியாக தயக்கமின்றி கீழ் படிய வேண்டியதன் அவசியத்தையும் பிரதிபலிக்கின்றது. இத்தகைய அடிபணிதல் கடவுளின் எல்லாம் வல்ல தன்மையிலும் மேலும் முழுமையான அதிகாரத்திலும் நமக்கிருக்கும் நம்பிக்கையை நிரூபிக்கின்றது. சுவிஷேசத்தின் எண்ணாகமம், அத்தியாயம் 19 ஐப் பார்க்கவும்.

*2:80-82சீர்கெட்டுப்போன முஸ்லிம்களிடம் நிலைபெற்றுவிட்ட ஒரு நம்பிக்கையானது, அவர்கள் செய்த பாவத்தின் அளவிற்கேற்ப மட்டுமே அவர்கள் நரகில் துன்பப்படுவார்கள், பின்னர் அவர்கள் நரகிலிருந்து வெளியேறி சுவனம் சென்றுவிடுவார்கள் என்பதாகும். மேலும் அவர்கள் சார்பாக முஹம்மது சிபாரிசு செய்து நரகில் இருந்து காப்பாற்றிஅழைத்துச்செல்வார் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகள் குர்ஆனுக்கு மாற்றமானவையாகும் (பின் இணைப்பு 8).

*2:101 பழைய ஏற்பாடு (மல்கியா 3:1-3) புதிய ஏற்பாடு (லூக்கா 17:22-37) மற்றும் இந்த இறுதி ஏற்பாடு (3:81) ஆகியவற்றில் கடவுளின் உடன்படிக்கைத் தூதர் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளார்.

*2:104 “ராஇனா” என்ற வார்த்தை சில எபிரேய மொழி பேசக்கூடியவர்களால் திரிக்கப்பட்டு கெட்ட வார்த்தை போல தோன்றுமாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது (மேலும் 4:46 ஐ பார்க்கவும்).

*2:106 குர்ஆனின் கணிதக்குறியீடு நிலையானதாகவும் முந்திய அற்புதங்களை விட மகத்தானதாகவும் உள்ளது. (34:45; 74:35) குர்ஆனைப்போலவே இது முந்திய அற்புதங்களை உறுதிப்படுத்துவதாகவும், பூர்த்தி செய்வதாகவும், மேலும் முந்தைய அற்புதங்கள் அனைத்தையும் ரத்து செய்வதாகவும் உள்ளது.

*2:111-112 2:62 மற்றும் 5:69 ஐ பார்க்கவும்.

*2:119 கடவுளின் உடன்படிக்கைத் தூதரான, இத்தூதர் “ரஷாத் கலீஃபா” தான் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியது என்னுடைய கடமை ஆகும். “ரஷாத்” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (505) “கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பையும் (725) இவ்வசன எண்ணையும் (119) நாம் கூட்டினால் நமக்குத் கிடைப்பது 1349. இது 19ன் பெருக்குத் தொகையாகும். 3:81 மற்றும் பின் இணைப்பு 2 ஐப் பார்க்கவும்.

*2:135 அடிபணிதல் ஆப்ரஹாமுடைய மார்க்கம் என்பதை குர்ஆன் மீண்டும் மீண்டும் நமக்கு அறிவிக்கின்றது (3:95 4:125, 6:161, 22:78). ஆப்ரஹாம் செயல்முறையுடன் கூடிய வேதத்தை பெற்றார், அதாவது அடிபணிதலின் அனைத்து விதமான கடமைகளையும் மற்றும் சடங்குகளையும் ஸதொடர்புத்தொழுகைகள் (ஸலாத்), கடமையான தர்மம் (ஜகாத்) ரமலானின் நோன்பு மற்றும் ஹஜ் புனித யாத்திரை] பெற்றார். 16:123 ல் நாம் காண்பது போல், முஹம்மது ஆப்ரஹாமின் மார்க்கத்தை பின்பற்றுகின்ற ஒருவராக இருந்தார். அவர் இந்த இறுதி ஏற்பாடான குர்ஆனை ஒப்படைத்தார். மார்க்கத்தின் நம்பகத்தன்மைக்கான சான்றை அடிபணிதலின் மூன்றாவது தூதர் ஒப்படைத்தார் (3:81 மற்றும் பின்இணைப்புகள்1,2,24 & 26 ஐப் பார்க்கவும்).

*2:142-145 தொடர்புத் தொழுகைகளின் போது (ஸலாத்) ஒருவர் முன்னோக்கும் திசையாகக் கிப்லா உள்ளது. மெக்காவிற்குப் பதிலாக, ஜெருசலேத்தை முன்னோக்குவதற்கான கட்டளையை கேப்ரியேல் முஹம்மதிடம் சேர்ப்பித்தபோது நயவஞ்சகர்கள் வெளிப்படுத்தப்பட்டனர். அரபிகள் அவர்களுடைய கிப்லாவான கஃபாவிற்கு சாதகமான பாரபட்சத்தை உறுதியாகக் கொண்டிருந்தனர். உண்மையான நம்பிக்கையாளர்கள் மட்டுமே அவர்களுடைய பாரபட்சத்தை வெல்ல முடிந்தது. அவர்கள் முழுமனதுடன் தூதருக்குக் கீழ்ப்படிந்தனர்.

*2:149 முஹம்மதின் சமாதி ஒரு “புனித மஸ்ஜிதாக” நியமனம் செய்யப்பட்டிருப்பது இன்றைய “முஸ்லிம்” களால் செய்யப்படும் இணைத்தெய்வ வழிபாட்டின் பிரகாசமான சான்றாக இருக்கின்றது. குர்ஆன் ஒரு “புனித மஸ்ஜிதை” மட்டுமே குறிப்பிடுகின்றது.

*2:154 நன்னெறியாளர்கள் உண்மையில் மரணிப்பதில்லை, அவர்கள் ஆதாம் மற்றும் ஏவாள் முன் ஒருமுறை வசித்திருந்த அதே சுவனத்திற்கு, தங்களுடைய உடம்புகளை இங்கு விட்டு விட்டு வெளியேறிச் செல்கின்றனர், அவ்வளவு தான் மேலும் சான்று மற்றும் விபரங்களுக்கு பின் இணைப்பு -1 7 ஐ பார்க்கவும்.

*2:155 எல்லா சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் நாம் கடவுளை மட்டும் வழிபடுகின்றோமா என்பதை நிரூபிக்கும் விதமாக சோதனை வடிவமைக்கப்பட்டுள்ளது. (29:2)

*2:165-166 இயேசு, மேரி, முஹம்மது, அலி மற்றும் புனிதர்கள் யாவரும் தங்களை இணைத்தெய்வமாக வழிபட்டோரை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்நாளில் கைவிட்டுவிடுவர் (மேலும் 16:86, 35 :14, 46:6, இன்னும் மத்தேயுவின் சுவிசேஷம் 7:21-23 ஐ பார்க்கவும்.)

*2:172-173 குர்ஆன் முழுக்க நான்கு உணவுகள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. (6:145, 16:115, பின் இணைப்பு 16) இவை நான்கிற்கப்பாற்பட்டுள்ள உணவுத் தடைகள் இணைத்தெய்வ வழிபாட்டிற்கு நிகரானவை ( 6:121, 148, 150,7:32).

*2:174-176 கடவுளின் கணித அற்புதத்தைக் குர்ஆனில் அவர்கள் அடையாளம் கண்டு கொண்ட போதிலும் வேண்டுமென்றே இந்தச் சீர்கெட்ட மார்க்கத் தலைவர்கள் மகத்தான இந்த அற்புதத்தை பல வருடங்களாக மறைக்க முயன்றனர். அவர்களில் பலர் தங்களுக்கன்றி, ரஷாத் கலீஃபாவிற்கு இந்த அற்புதம் அருளப்பட்டதால்தான் இந்த உண்மையை தீவிரமாக ஆட்சேபித்ததாக ஒப்புக்கொண்டனர்.

*2:178 தெளிவாக, குர்ஆன் மரண தண்டனையை ஊக்குவிக்கவில்லை. கொலைகாரனின் உயிர்உட்பட, உயிர்களைக் காக்க எல்லா வகையான மன்னிப்பும் தரப்படுகின்றது. ஒரு பொருத்தமான நிவாரணத் தொகைக்குப் பகரமாக கொலைகாரனின் உயிரை விட்டுத்தருவது, சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் பலியானவரின் சுற்றத்தாருக்குச் சரியாகப்படலாம். இன்னும் உதாரணத்திற்கு, ஒரு பெண் ஆணைக் கொன்றாலோ அல்லது ஆண் பெண்னைக் கொன்றாலோ மரணதண்டனை பொருந்தாது.

*2:183-187 அடிபணிதலின் எல்லாக்கடமைகளையும் போலவே, நோன்பிருத்தலும், ஆப்ரஹாம் மூலமாகவே விதிக்கப்பட்டுள்ளது. (22:78, பின்இணைப்புகள் 9 மற்றும் 15). குர்ஆன் வெளிப்படுவதற்கு முன்னதாக தாம்பத்ய உறவு நோன்புகாலம் முழுவதும் தடை செய்யப்பட்டிருந்தது. ரமலான் இரவுகளின் போது தாம்பத்ய உறவை அனுமதிப்பதற்காக 2:187ல் இச்சட்டத்தில் மாற்றம் செய்யப்படுகின்றது.

*2:189 இலக்கிய நடையிலுள்ள குர்ஆனின் சொற்றொடர் “பின் வாசல்கள் வாயிலாக வீடுகளுக்குள் நுழையாதீர்கள்” என்று கூறுகின்றது. நிலவின் நிலைகளைப் பற்றிய கேள்வியானது, சுற்றி வளைத்து பேசுவதற்கு ஒரு உதாரணமாகும்; இந்த கேள்விக்குப் பின்னால் தீய உள்ளந்தரங்க நோக்கங்கள் இருந்தன.

*2:190 சண்டைகள் அனைத்தும் 60:8-9ல் உள்ள அடிப்படை விதியால் முறைப்படுத்தப்படுகின்றது. சண்டையிடுதல் கண்டிப்பாகத் தற்காப்பிற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. அதே சமயம் வலுச்சண்டையிடுவதும், அடக்குமுறை செய்வதும் குர்ஆன் முழுவதும் அழுத்தமாகக் கண்டனம் செய்யப்படுகின்றது.

*2:196 ஹஜ் மற்றும் “உம்ரா” வின் விபரங்களுக்கு பின்இணைப்பு 15 ஐ பார்க்கவும்.

*2:197 ஜூல் ஹிஜ்ஜாஹ், முஹர்ரம், ஸபர் மற்றும் ரபியுல் அவ்வல் ஆகிய புனித மாதங்களில் எந்த நேரத்திலும் ஹஜ்ஜைக் கடைப்பிடிக்கலாம், உள்ளூர் அரசுகள் தங்களுடைய வசதிக்காக ஹஜ்ஜை ஒருசில தினங்களுக்கு வரையறுக்கின்றன. 9:37 ஐ பார்க்கவும்.

*2.210. இந்த உலகம் ஒரு சோதனையாகும்; இணைத்தெய்வ வழிபாட்டை கைவிட்டு அதைஎதிர்த்து போராடுவதன் மூலம் கடவுளின் அரசாட்சிக்குள் நம்மை நாம் மீண்டும் நுழைத்துக் கொள்ள இது நமக்கு கடைசி வாய்ப்பாகும் (அறிமுகவுரையைப் பார்க்கவும்). கடவுளும் அவருடைய வானவர்களும் கண்களுக்குத் தெரிவார்களேயானால், அனைவரும் நம்பிக்கை கொண்டு விடுவார்கள். மேலும் சோதனைக்கு மதிப்பில்லாது போயிருக்கும்.

*2:211 குர்ஆனின் கணித அற்புதம் ஒரு பெரிய அருட்கொடை, இது தன்னுடன் ஒரு மகத்தான பொறுப்பைக் கொண்டு வந்துள்ளது (5:115 ஐ தயவு செய்து பார்க்கவும்).

*2:213 எல்லா மார்க்கத்திலும் கடவுளை மட்டும் வழிபடுபவர்கள் உண்மையில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள்.

*2:219 போதை ஊட்டக் கூடிய பொருட்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான மருந்துகளை தயாரிப்பதினால் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை விட அவற்றால் ஏற்படும் போக்குவரத்து இறப்புகள், போதைக்கு அடிமையான தாய்மார்களின் குழந்தைகளின் மூளை பாதிப்பு, குடும்பநெருக்கடிகள் மேலும் மற்ற ஆபத்தான விளைவுகள் அதிக நஷ்டத்தை அளிப்பதை இப்போது உலகம் அடையாளம் கண்டிருக்கின்றது. மேலும் விபரங்களுக்கு ஆல்கஹாலிக்ஸ் அனோனிமஸ்” அண்ட் “கேம்ப்ளர்ஸ் அனோனிமஸ்” ஐக் கொண்டு சரிபார்க்கவும். 5:90-91ஐயும் பார்க்கவும்.

*2:238 ஐந்து வேளை தொழுகைகள்*அனைத்தும் 2:238 11:114, 17:78 & 24:58 ஆகிய வசனங்களில் காணப்படுகின்றன. குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டபோது தொடர்பு தொழுகைகள் (ஸலாத்) அதற்கு முன்பே வழக்கத்தில் இருந்து வந்தது (பின் இணைப்பு - 9). ஐந்து வேளைத் தொழுகைகளின் விவரங்கள் - ஒவ்வொரு தொழுகையிலும் என்ன ஓத வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும், எத்தனை ரக்அத்துகள் மற்றவை - அனைத்தும் கணிதமுறையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு ஒவ்வொரு தொழுகையின் ரக்அத்துக்களையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதினால் நமக்கு கிடைப்பது 24434=19 X1286 இன்னும் நாம் (*) இதை சூரா 1 (அல்பாத்திஹாஹ்)க்கு பயன்படுத்தினால், (*) = அதாவது சூரா (1), அதைத் தொடர்ந்து மொத்த வசன எண் (7), அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வசன எண்ணும், தொடர்ந்து ஒவ்வொரு வசனத்தில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையும், மேலும் ஒவ்வொரு எழுத்தின் எழுத்தெண் மதிப்பு, இதனை நாம் எழுதினால் 2(*)(*) 4 (*)(*)(*)(*) 4 (*)(*)(*)(*) 3 (*)(*)(*) 4 (*)(*)(*)(*) இது பத்தொன்பதின் பெருக்குத்தொகையைக் கொண்டதாகும். (1:1ஐப் பார்க்கவும்)

*2:246 இதே சரித்திரம் பைபிளின் 1வது புத்தகமான சாமுவேல் 9, மற்றும் 10-ம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.

*2:252 குர்ஆனின் கணித கட்டமைப்பிற்கு ஏற்றவாறு கடவுள் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தூதரின் பெயரை கணித ரீதியிலேயே சொல்ல நாடி உள்ளார். 19ஐ அடிப்படையாகக் கொண்ட குர்ஆனின் அற்புதம் - கடவுளின் உடன்படிக்கை தூதர் மூலம் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று கடவுள் தீர்மானித்து விட்டார். இந்த வசன எண் 252ஐயும், “ரஷாத்” என்ற வார்த்தையின் எழுத்தெண் மதிப்பையும் (505) கலீஃபா என்ற வார்த்தையின் எழுத்தெண் மதிப்பையும் (725) கூட்டினால் நாம் பெறுவது 252+505+725 =1482 அல்லது 19 X78. கடவுளின் நிரூபிக்கப்பட்ட உடன்படிக்கை தூதரின் அடையாளமும் இந்த வசனம் தெளிவாக யாரை குறிக்கின்றது என்பன போன்ற முழு விளக்கங்களுக்கு பின் இணைப்பு 2 மற்றும் 26ஐ தயவு செய்து பார்க்கவும்.

*2:254 சக்தியற்ற மனித இணைத்தெய்வங்களை. அதாவது இயேசு, முஹம்மது போன்றவர்களை பரிந்துரை செய்ய சக்தி உடையவர்கள் என்று இட்டுகட்டுவது சாத்தானுடைய புத்திசாலித்தனமான தந்திரங்களில் ஒன்றாகும் (பின் இணைப்பு 8).

*2:259 இங்கு நாம் அறியும் பாடம் மரணத்தின் காலஅளவு - ஒரு நாளைப் போலச் சென்று விடும் என்பதாகும் - நன்னெறியற்றவர்கள் மட்டுமே மரணிக்கின்றார்கள்; நன்னெறியாளர்கள் நேராக சுவனத்திற்கு செல்கின்றார்கள் (18:19-25 மேலும் பின் இணைப்பு 17ஐயும் பார்க்கவும்).

*2:275-278 கடன்களின் மீதான அதிக வட்டி ஒரு மொத்த நாட்டையும் முழுவதுமாக அழித்துவிடும் என்பது நிரூபிக்கப்பட்டஒரு பொருளாதார கொள்கையாகும். அதிகமான வட்டிச்சுமை சுமத்தப்பட்டதால் பல தேசங்களின் பொருளாதாரம் நாசம் அடைந்ததை கடந்த சில ஆண்டுகளாக நாம் பார்த்திருக்கின்றோம். சாதாரண வட்டி 20% க்கும் குறைவானது - அதனால் எவரும் பாதிக்கப்படுவதில்லை, மேலும் ஒவ்வொருவரும் திருப்தி அடைந்தார்கள் என்றால் அது கடும் வட்டி ஆகாது.

*2:282 பணம் சம்பந்தமான விவகாரங்களில் மட்டுமே இருபெண்கள் ஒரு ஆணிற்குப் பதிலாக சாட்சியாக ஏற்படுத்தப்பட வேண்டும். ஒரு வேளை, ஒரு சாட்சி இன்னொரு சாட்சியை திருமணம் செய்து அதனால் அவள் ஒருதலைபட்சமாக மாறிவிடக் கூடும் சாத்தியத்திற்கு எதிராக இது பாதுகாப்பளிக்கும். ஆண்களை விட பெண்கள், அதிகம் உணர்வுப்பூர்வமாக பலவீனமானவர்கள் என்பது அடையாளம் காணப்பட்டதோர் உண்மையாக இருக்கின்றது.

*2:285 நீங்கள் கடவுளுடைய தூதர்களுக்கிடையில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது, என்பது முக்கியமான கட்டளைகளில் ஒன்றாகும் (2:136, 3:84,4:150). நம்பிக்கை கொண்டவர்கள் இதற்கு பதிலளிக்கும் விதமாக “நாங்கள் செவியேற்றோம், நாங்கள் கீழ்படிகின்றோம்” என்று கூறுவார்கள், அதே சமயம் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் மற்ற தூதர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு முஹம்மதுடைய பெயரை கடவுளுடைய பெயருக்கு அடுத்தபடியாக குறிப்பிடுவதை வற்புறுத்தியும் அதை நியாயப்படுத்தியும் தர்க்கம் செய்கின்றார்கள். சீர் கெட்ட முஸ்லிம்கள் தங்களுடைய நம்பிக்கையின் அடிப்படையான சாட்சியம் (ஷஹாதா) கூறுவதிலும், மேலும் அவர்களுடைய தொடர்பு தொழுகைகளிலும் முஹம்மதின் பெயரை குறிப்பிடுகின்றார்கள் (72:18 ஐ -பார்க்கவும்).