சூரா 58: தர்க்கம் (அல்-முஜாதலா)
[58:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[58:1] தன்னுடைய கணவனைப் பற்றி உம்முடன் தர்க் கித்து, மேலும் கடவுள்-இடம் புகார் கொடுத்த அப்பெண்மணியைக் கடவுள் செவியேற்றுக் கொண்டார். நீங்கள் இருவரும் விவாதித்த ஒவ்வொன்றையும் கடவுள் செவியேற்றார். கடவுள் செவியேற்பவர், பார்ப்பவர்.
[58:2] தங்களுடைய தாய்மார்கள் என (தாம்பத்யத்திற்கு தடை செய்யப்பட்டவர்களாக அவர்களை அறிவிப்பதன் மூலம்) தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொள்ளும் உங்களில் உள்ளவர்கள், அவர்கள் தங்களுடைய தாய் மார்கள் அல்ல* என்பதை முற்றிலும் நன்கறிந்தே இருக்கின்றனர். அவர்களைப் பெற்றெடுத்தவர் களே அவர்களுடைய தாய்மார்கள் ஆவார்கள். உண்மையில், அவர்கள் ஓர் அவதூறையும் மேலும் ஒரு வஞ்சகத்தையும் செய்கின்றனர். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.
அடிகுறிப்பு

[58:3] இந்த முறையில் தங்களுடைய மனைவியரைப் பிணையறுத்துக் கொண்டு விட்டு, அதற்குப் பின்னர் இணக்கமாகிக் கொள்பவர்கள், தங் களுடைய தாம்பத்யத் தொடர்புகளை மீண்டும் துவங்குவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுதலை செய்வது கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். இது உங்களுக்கு அறிவூட்டு வதற்காக வேயாகும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[58:4] விடுதலை செய்வதற்கு ஓர் அடிமையை நீங்கள் காண இயலாமற் போனால், தாம்பத்யத் தொடர்பு களை மீண்டும் துவங்குவதற்கு முன்னர் தொடர்ச்சியான இரு மாதங்களுக்கு நீங்கள் நோன்பிருக்க வேண்டும். உங்களால் நோன் பிருக்க இயலாவிட்டால், பின்னர் நீங்கள் அறுபது ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும். கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவை கடவுள்-ன் சட்டங்களாகும். நம்ப மறுப்பவர்கள் வலி நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[58:5] நிச்சயமாக, கடவுள் மற்றும் அவருடைய தூதருடன் சண்டையிடுபவர்கள், முன்னிருந்த அவர்களுடைய சகாக்கள் தோல்வியடையுமாறு செய்யப் பட்டதைப்போல், தோல்வியடையுமாறு செய்யப்படுவார்கள். தெளிவான சான்றுகளை நாம் இறக்கி அனுப்பியுள்ளோம், மேலும் அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[58:6] கடவுள் அவர்கள் அனைவரையும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பி, பின்னர் அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அறிவிக்கின்ற அந்நாள் வரும். அவர்கள் அதனை மறந்து விட்ட அதே சமயம், கடவுள் ஒவ்வொன்றையும் பதிவு செய்துள்ளார். எல்லா விஷயங்களுக்கும் கடவுள் சாட்சியாக இருக்கின்றார்.

கடவுள் இப்பொழுது உங்களுடன் இருக்கின்றார்

[58:7] வானங்களில் உள்ள ஒவ்வொன்றையும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக்கின்றார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? மூன்று மனிதர்கள் எவரும் நான்காமவராக அவர் இல்லாமல், அன்றி ஐவர், ஆறாமவராக அவர் இல்லாமல் அன்றி அதற்குக் குறைவாகவோ, அன்றி அதிக மாகவோ, அவர்கள் எங்கிருந்த போதிலும் அங்கே அவர்களுடன் அவர் இல்லாமல் இரகசி யமாகச் சூழ்ச்சி செய்ய இயலாது. பின்னர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, அவர்கள் செய்த ஒவ்வொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அவர் அறிவிப்பார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.

சூழ்ச்சி செய்யாதீர்கள்

[58:8] இரகசியமாகச் சூழ்ச்சி செய்வதிலிருந்து தடுக்கப்பட்டவர்களாக இருந்தும், பின்னர் சூழ்ச்சி செய்தலை வலியுறுத்துபவர்களை நீர் கவனித்திருக்கின்றீரா? பாவகாரியம், வரம்புமீறல், மேலும் தூதருக்குக் கீழ்ப்படியாமை, ஆகிய வற்றைச் செய்வதற்காக அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். அவர்கள் உம்மிடம் வரும் போது, கடவுள்-ஆல் கட்டளையிடப்பட்டதை விடுத்து வேறு ஒரு வாழ்த்தைக் கொண்டு உம்மை அவர்கள் வாழ்த்துகின்றனர். அவர்கள் தங்களுக்குள், “நம்முடைய கூற்றுக்களுக் காகக் கடவுள் நம்மைத் தண்டிக்க மாட்டார்” என்று கூறிக்கொள்கின்றனர். அவர்களுக் குரிய ஒரே கைம்மாறு ஜஹன்னாவேயாகும், அதிலே அவர்கள் எரிவார்கள்; எத்தகைய தொரு துன்பகரமான விதி.
[58:9] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் இரகசிய மாகக் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால், பாவகாரியம், வரம்பு மீறல் மற்றும் தூதருக்குக் கீழ்ப்படியாமை ஆகியவற்றைச் செய்வதற்காக கலந்தாலோசிக்கக் கூடாது. நன்னெறி மற்றும் பக்தி ஆகியவற்றைச் செய்வதற்காகவே நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டும். எவர் முன் நீங்கள் ஒன்று கூட்டப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-க்கு நீங்கள் பயபக்தியோடிருக்க வேண்டும்.
[58:10] இரகசியச்சூழ்ச்சியானது சாத்தானின் யோச னையாகும், அதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தீங்கு செய்ய அவன் முயலுகின்றான். எப்படியிருப்பினும், கடவுள்-ன் நாட்டத்திற்கு எதிராக அவர்களுக்கு அவன் தீங்கு செய்ய இயலாது. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[58:11] நம்பிக்கை கொண்டோரே, “இடமளியுங்கள்,” என்று உங்களிடம் கூறப்பட்டால், நீங்கள் ஒருவருக்கொருவர் அமர்வதற்கு இடமளிக்க வேண்டும். கடவுள் அப்போது உங்களுக்கு இடமளிப்பார். எழுந்து நகரும்படி உங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டால், எழுந்து நகர்ந் திடுங்கள். உங்களுக்கிடையில் நம்பிக்கை கொண்டவர்களையும், மேலும் அறிவு பெற்றவர் களையும் உயர் அந்தஸ்துக்களுக்குக் கடவுள் உயர்த்துகின்றார். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[58:12] நம்பிக்கை கொண்டோரே, தூதருடன் கலந்தா லோசிக்க நீங்கள் விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு முன்னர், நீங்கள் (ஏழைகளுக்கு) ஒரு தர்மத்தை அளிக்க வேண்டும். இது உங்களுக்கு மேலானதும், தூய்மையானதும் ஆகும். உங்களால் அது இயலாவிட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[58:13] கலந்தாலோசிப்பதற்கு முன்னர் நீங்கள் தர்மம் கொடுக்கத் தவறிவிட்டு, அதற்குப் பின்னர் வருந்தித்திருந்தினால், கடவுள் உங்களுடைய வருந்தித்திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார். நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கவும், கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுக்கவும், மேலும் கடவுள் மற்றும் அவரு டைய தூதருக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

உங்களுடைய நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்

[58:14] எவர்கள் மீது கடவுள் கோபம் கொண்டிருக் கின்றாரோ, அவர்களுடன் நட்புக்கொண்ட மக்களை நீர் கவனித்திருக்கின்றீரா? அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்களோ, அன்றி அவர்களைச் சேர்ந்தவர்களோ அல்ல. அவர்கள் நன்கறிந்து கொண்டே பொய்களால் சத்தியமிடுகின்றனர்!
[58:15] கடுமையானதொரு தண்டனையைக் கடவுள் அவர்களுக்காகத் தயார் செய்திருக்கின்றார். அவர்கள் செய்து கொண்டிருப்பது உண்மையில் துக்ககரமானதாகும்.
[58:16] அவர்கள் தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை, கடவுள்-ன் பாதையிலிருந்து தடுக்கின்ற ஓர் உபாயமாகப் பயன்படுத்தினர். அதன்விளை வாக, இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளாகி விட்டனர்.
[58:17] அவர்களுடைய பணமோ, அன்றி அவர் களுடைய பிள்ளைகளோ கடவுள்-க் கெதிராக அவர்களுக்கு உதவி செய்ய இயலாது. அவர்கள் நரக நெருப்பிற்கு உள்ளாகி விட்டனர், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்.
[58:18] அவர்கள் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்ற அந்நாள் வரும். தாங்கள் மெய்யாகவே சரியானவர்கள் என்றெண்ணிக் கொண்டு, இப்பொழுது உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வதைப் போல், அப்போது அவரிடமும் அவர்கள் சத்தியம் செய்வார்கள்! உண்மையில், அவர்கள் தான் உண்மையான பொய்யர்கள் ஆவர்.
[58:19] சாத்தான் அவர்களை வசப்படுத்திக் கொண் டான், மேலும் கடவுள்-ன் தூதுச் செய்தியை அவர்கள் புறக்கணிக்குமாறு செய்துவிட்டான். இவர்கள் தான் சாத்தானின் கட்சியினர். நிச்சயமாக, சாத்தானின் கட்சியினர்தான் நஷ்டவாளிகள்.
[58:20] நிச்சயமாக, கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மிகக் கீழ்மையானவர்களுடன் இருப்பார்கள்.
[58:21] கடவுள்: “ நானும் என்னுடைய தூதர்களும் மிக வும் நிச்சயமாக வெற்றி பெறுவோம்” என்று விதித்துள்ளார். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.

உங்கள் வாழ்க்கைக்காக ஓடுங்கள்

[58:22] கடவுள் மற்றும் இறுதி நாள் மீது நம்பிக்கை கொண்ட மக்கள், கடவுள்-ஐயும் மற்றும் தூதர்களையும் எதிர்ப்போர் தங்கள் பெற்றோர் களாகவோ, அல்லது தங்கள் பிள்ளைகளாக வோ, அல்லது தங்கள் உடன்பிறப்புக் களாகவோ, அல்லது தங்களுடைய குலத்த வராகவோ இருந்த போதிலும், அவர்களுடன் நட்புக் கொள்வதை நீர் காணமாட்டீர். இத்தகை யோருக்கு, அவர்களுடைய இதயங்களில் விசுவாசத்தை அவர் விதிக்கின்றார், மேலும் தன்னிடமிருந்து உள்ளுணர்வைக் கொண்டு அவர்களுக்கு ஆதரவளிக்கின்றார், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் நுழைய அவர்களை அனுமதிக்கின்றார் அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்கள் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தனர். இவர்கள் தான் கடவுள்-ன் கட்சியினர். மிகவும் நிச்சயமாக, கடவுள்-ன் கட்சியினர்தான் வெற்றியாளர்கள்.