சூரா 80: அவர் முகம் சுளித்தார் (‘அபஸ)
[80:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[80:1] அவர் (முஹம்மது) முகம் சுளித்தார் மேலும் திரும்பிச் சென்று விட்டார்.
[80:2] பார்வையற்ற அந்த மனிதர் அவரிடம் வந்த பொழுது.
[80:3] உமக்கு எப்படித் தெரியும்? அவர் தன்னையே தூய்மைப்படுத்திக் கொள்ளக் கூடும்.
[80:4] அல்லது அவர் கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடும், மேலும் தூதுச் செய்தியிலிருந்து பயன் பெறக் கூடும்.
[80:5] செல்வந்தனான அம்மனிதனைப் பொறுத்தவரை.
[80:6] உம்முடைய கவனத்தை நீர் அவனிடம் செலுத்தினீர்.
[80:7] அவனுடைய மீட்சிக்கு உம்மால் உத்தரவாதம் அளிக்க இயலாத போதிலும்.
[80:8] ஆர்வத்துடன் உம்மிடம் வந்த அந்த ஒருவர்.
[80:9] மேலும் மெய்யாகவே பயபக்தியுடையவர்.
[80:10] நீர் அவரை புறக்கணித்தீர்.
[80:11] உண்மையில், இது ஒரு நினைவூட்டலாகும்.
[80:12] விரும்புகின்ற எவரும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
[80:13] கண்ணியமான வேதங்களில்.
[80:14] மேன்மையானது மேலும் தூய்மையானது.
[80:15] தூதர்களின் கரங்களால் (எழுதப்பட்டது).
[80:16] கண்ணியமானவர்கள் மேலும் நன்னெறி யாளர்கள்.
[80:17] மனிதனுக்குத் கேடுதான்; அவன் மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான்!
[80:18] எதிலிருந்து அவர் அவனைப் படைத்தார்?
[80:19] ஒருசிறு துளியிலிருந்து, அவர் அவனைப் படைக்கின்றார், மேலும் அவனை வடிவமைக் கின்றார்.
[80:20] பின்னர் அவனுக்காக பாதையை அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
[80:21] பின்னர் அவனை மரணத்திலும், மேலும் சமாதியினுள்ளும் அவர் ஆழ்த்துகின்றார்.
[80:22] அவர் நாடும் பொழுது, அவர் அவனை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றார்.
[80:23] அவன் அவருடைய கட்டளைகளை உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
[80:24] மனிதன் தன் உணவைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்கட்டும்!
[80:25] தண்ணீரை நாம் தாராளமாக ஊற்றுகின்றோம்.
[80:26] பின்னர் நாம் மண்ணைப் பிளந்து திறக்கச் செய்கின்றோம்.
[80:27] தானியங்களை அதனில் நாம் வளர்க்கின்றோம்.
[80:28] திராட்சைகள் மற்றும் புல்வெளிகள்.
[80:29] ஒலிவம் மற்றும் பேரீச்சைகள்.
[80:30] விதவிதமான பழத்தோட்டங்கள்.
[80:31] பழங்கள் மற்றும் காய்கறிகள்.
[80:32] உங்களுக்கும், உங்களுடைய கால்நடை களுக்கும் வாழ்விற்கான ஆதாரங்களை வழங்குவதற்காக.
[80:33] பின்னர், ஊதுதல் நிகழ்ந்தேறும் போது.
[80:34] அதுதான் ஒருவன் தன் சகோதரனிடமிருந்து விரண்டோடும் நாளாகும்.
[80:35] தன் தாய் மற்றும் தந்தையிடமிருந்து.
[80:36] தன் வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளை களிடமிருந்து.
[80:37] அவர்கள் ஒவ்வொருவரும், அந்நாளில், தன்னுடைய சொந்தத் தலைவிதியைப் பற்றியே கவலைப்படுவார்கள்.
[80:38] சில முகங்கள் அந்நாளில் மகிழ்ச்சியுடன் இருக்கும்.
[80:39] சிரித்துக் கொண்டும் ஆனந்தத்துடனும்.
[80:40] மற்ற முகங்களோ, அந்நாளில், துக்கத்தால் சூழப்பட்டிருக்கும்.
[80:41] குற்றவுணர்வில் ஆழ்ந்தவர்களாக.
[80:42] இவர்கள் தான் தீய நம்பமறுப்பவர்களாவர்.