சூரா 46: மணற்குன்றுகள் (அல்-அஹ்காஃப்)
[46:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[46:1] ஹா.ம.
[46:2] இந்த வேத வெளிப்பாடானது சர்வ வல்லமை யுடையவரும், ஞானம் மிக்கவருமான, கடவுள் -இடமிருந்து வந்துள்ளது.
[46:3] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், மேலும் வரையறுக்கப்பட்டதொரு தவணைக்காகவுமே அன்றி நாம் படைக்கவில்லை. நம்ப மறுப் பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் முற்றிலும் கவனமற்றவர் களாகவே இருக்கின்றார்கள்.
[46:4] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களைச் சிந்தித்துப் பாருங் கள். பூமியின் மீது அவை எதனை படைத் திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டு ங்கள். வானங்களில் ஒரு பங்கை அவை சொந்த மாகக் கொண்டிருக்கின்றனவா? இதற்கு முந்திய வேதம் வேறு எதையேனுமோ, அல்லது உங்களுடைய இணைவழிபாட்டிற்கு ஆதர வளிக்கும் நிரூபிக்கப்பட்ட அறிவின் ஏதேனும் பகுதியையோ, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.

இணைத் தெய்வங்கள் முற்றிலும் அறியாதிருக்கின்றன

[46:5] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு ஒருபோதும் மறுமொழியளிக்க முடியாத, மேலும் அவர்கள் வழிபடுவதைக் குறித்து முற்றிலும் அறியாதிருக்கின்ற இணைத்தெய்வங்களைக் கடவுள்-உடன் வழிபடுகின்றவர்களை விட, வழிகேட்டில் வெகு தூரம் இருப்பவர்கள் யார்?

இணைத்தெய்வங்கள் தங்களை *வழிபட்டவர்களைக் கைவிட்டு விடுகின்றன

[46:6] மேலும் (தீர்ப்பு நாளன்று) மக்கள் ஒன்று கூட்டப்படும் பொழுது, அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அவர்களுடைய விரோதிகளாக ஆகி விடுவார்கள், மேலும் அவர் களுடைய இணைவழிபாட்டினைப்* பழித்துக் கூறுவார்கள்.
அடிகுறிப்பு

[46:7] நம்முடைய வெளிப்பாடுகள் முற்றிலும் தெளி வாக, அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட பொழுது, தங்களிடம் வந்த சத்தியத்தைக் குறித்து நம்ப மறுப்பவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமேயாகும்!” என்று கூறினார்கள்.
[46:8] “இதனை அவர் இட்டுக் கட்டிக் கொண்டார்,” என்று அவர்கள் கூறும்போது, “இதனை நான் இட்டுக் கட்டிக் கொண்டிருப்பேனாயின், பின்னர் கடவுள்-இடமிருந்து என்னைக் காக்க உங்களால் இயலாது. நீங்கள் செய்கின்ற சூழ்ச்சி ஒவ்வொன் றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக அவர் போதுமானவர். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.
[46:9] “மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறுபட்டவர் அல்ல. எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். நான் ஆழ்ந்ததொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.

பக்திமானாகிய யூதகுரு ஜுதா*

[46:10] “கடவுள்-இடமிருந்து இது வந்திருந்து இதனை நீங்கள் நிராகரித்து விட்டால் உங்கள் நிலை என்ன? இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து ஒரு சாட்சி இதைப் போன்றதொரு அற்புத நிகழ்விற்குச்* சாட்சியம் அளித்துள்ளார், மேலும் அவர் நம்பிக்கை கொண்டார், அதே சமயம் நீங்கள் ஆணவம் கொண்டீர்கள். நிச்சயமாக, பாவிகளான சமூகத்தைக் கடவுள் வழிநடத்த மாட்டார்” என்று கூறுவீராக.
அடிகுறிப்பு

[46:11] நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி, “இது ஏதேனும் நல்லதாக இருந்திருந்தால், எங்களுக்கு முன்னர் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். ஏனெனில் அவர்கள் அதன்பால் வழிநடத்தப் படாததால், அவர்கள், “இது பழமையானதொரு இட்டுக்கட்டலே ஆகும்!” என்று கூறினார்கள்.
[46:12] இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் வழிகாட்ட லையும் மேலும் கருணையையும் வழங்கியது. இதுவும் மெய்ப்பிக்கின்றதொரு வேதமாகும், வரம்பு மீறியவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தி தருவதற் காகவும் அரபி மொழியிலானதாகும்.

நற்செய்தி

[46:13] நிச்சயமாக, “கடவுள் தான் எங்கள் இரட்சகர்,” என்று கூறி, பின்னர் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[46:14] அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டார் கள், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கோர் வெகுமதி.

தீர்மானிக்கும் வயது: 40*

[46:15] மனிதனை அவனுடைய பெற்றோரைக் கண்ணியப் படுத்துமாறு நாம் கட்டளையிட்டோம். அவனுடைய தாய் கஷ்டத்துடன் அவனைச் சுமந்தாள், கஷ்டத்துடன் அவனைப் பிரசவித்தாள், மேலும் முப்பது மாதங்கள் அவன் மீது தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டாள். அவன் பக்குவ முதிர்ச்சி அடைந்ததோடு, மேலும் நாற்பது வயதை* அடைந்தவுடன், அவன், “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்திருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும்படியும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறியான காரியங்களைச் செய்யும்படியும் என்னை வழி நடத்துவீராக. அதுபோலவே என்னுடைய குழந்தைகளையும் நன்னெறியாளர்களாக இருக்கச் செய்வீராக. நான் உம்மிடம் வருந்தித்திருந்து கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறவேண்டும்.
அடிகுறிப்பு

[46:16] இவர்களிடமிருந்துதான் நன்னெறியான காரியங் களை நாம் ஏற்றுக் கொள்வோம், மேலும் அவர் களுடைய பாவங்களைப் பிழை பொறுத்துக் கொள் வோம். அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டனர். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள சத்தியம் நிறைந்த வாக்குறுதியாகும்.
[46:17] பின்னர் தன் பெற்றோரிடம் இவ்வாறு கூறுகின்ற ஒருவனும் இருக்கின்றான், “உங்களுக்குக் கேடுதான்; (மரணத்திற்குப் பின்) நான் மீண்டும் உயிர் பெறுவேன் என்று நீங்கள் என்னிடம் கூறுகின்றீர்களா? இவ்வாறென்றால் நமக்கு முன்னர் மரணித்தவர்கள் ஒருபோதும் திரும்பி வராதிருப்பது ஏன்?” அவனுடைய பெற்றோர்கள் கடவுள்-ன் உதவிக்காகக் கதறுவார்கள், மேலும், “உனக்குத்தான் கேடு; தயவு செய்து நம்பிக்கை கொள்! கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும்” என்று கூறுவார்கள். அவன், “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்!” என்று கூறுவான்.
[46:18] ஜின்கள் மற்றும் மனிதர்களின் ஒவ்வொரு தலை முறைகளிலும் நம்ப மறுப்பவர்களென முத்திரை யிடப்பட்டவர்கள் இத்தகையவர்கள் தான்; அவர்கள் நஷ்டவாளிகள் ஆவார்கள்.
[46:19] அவர்கள் அனைவரும் அவர்களுடைய காரியங்களுக்கு ஏற்ப, அவர்களுக்குத் தகுந்த அந்தஸ்துகளை அடைவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்களுடைய காரியங்களுக்குரிய கூலியை, அவர்களுக்கு அவர் கொடுப்பார்.
[46:20] நம்ப மறுப்பவர்களை நரக நெருப்பிற்கு அறிமுகப்படுத்துகின்ற அந்நாள் வரும்; “உங்களுடைய உலக வாழ்வின் போது, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்பு களை நீங்கள் வீணடித்து விட்டீர்கள், மேலும் அவற்றில் நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தீர்கள். அதன் விளைவாக, பூமியில் எந்த அடிப்படையுமின்றி நீங்கள் ஆணவம் புரிந்தமைக்கு ஒரு கைம்மாறாகவும், மேலும் உங்களுடைய கெட்ட காரியங்களுக்காகவும் இன்றைய தினம் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விட்டீர்கள்.”

ஹூத்

[46:21] ஆதுகளின் சகோதரர் மணற்குன்றுகளில் தன் சமூகத்தாரை எச்சரித்ததை நினைவு கூர்வீராக - அவருக்கு முன்னரும் மற்றும் அவருக்குப் பின்னரும் எண்ணற்ற எச்சரிக்கைகள் வழங்கப் பட்டன: “கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபட வேண்டாம். மகத்தானதொரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்”.
[46:22] அவர்கள், “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திசை திருப்புவதற்காக நீர் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துகின்றதை (அத் தண்டனையை) கொண்டு வருமாறு நாங்கள் சவால் விடுகின்றோம்” என்று கூறினார்கள்.
[46:23] அவர், “இதனைப் பற்றிய அறிவு கடவுள் வசம் உள்ளது; எதனை ஒப்படைக்க நான் அனுப்பப் பட்டேனோ அதனை மட்டுமே நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். இருந்த போதிலும், அறிவில்லாத மக்களாகவே நான் உங்களைக் காண்கின்றேன்” என்று கூறினார்.
[46:24] புயல் அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டபோது, அவர்கள், “நமக்கு மிகவும் தேவைப் படுகின்ற மழையை இந்தப் புயல் கொண்டு வரும்” என்று கூறினார்கள். மாறாக, (ஹூதிடம்) நீங்கள் கொண்டு வருமாறு சவால் விடுத்தது இதுதான்; வலி நிறைந்த தண்டனையை தன்னில் கொண்டுள்ள உக்கிரமான காற்று.
[46:25] தன்னுடைய இரட்சகரின் கட்டளைப்படி, எல்லா வற்றையும் அது அழித்தது. அதிகாலையில், அவர்களுடைய வீடுகளைத் தவிர எதுவும் நிற்கவில்லை. குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.

தூதர்களுடைய எச்சரிக்கைகளை அவர்கள் கேலி செய்தனர்

[46:26] உங்களை நாம் நிலை நிறுத்திய அதே விதமாக வே அவர்களையும் நாம் நிலைநிறுத்தியிருந்தோம், மேலும் அவர்களுக்குச் செவிப்புலன்களையும், கண்களையும், மேலும் மனங்களையும் வழங்கி னோம். ஆனால் அவர்களுடைய செவிப்புலன் களும், கண்களும், மேலும் மனங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட வில்லை. இது ஏனெனில், கடவுள்-ன் வெளிப்பாடுகளை புறக்கணிப்பதென அவர்கள் தீர்மானித்திருந்தனர். இவ்விதமாக, அவர்கள் கேலி செய்த முன்னறிவிப்புகளும் மற்றும் எச்சரிக்கைகளும் அவர்களுடைய அழிவிற்குக் காரணமாயின.
[46:27] அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காக, சான்றுகளை நாம் விவரித்த பின்னரே, உங்களைச் சூழ்ந்திருந்த பல சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.
[46:28] கடவுள்-க்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்ல அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்கள் ஏன் அப்போது அவர்களுக்கு உதவி செய்யத் தவறி விட்டன? மாறாக, அவை அவர்களைக் கைவிட்டு விட்டன. அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்த போலித் தெய்வங்கள் இத்தகையதாகவே இருந்தன; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட புதுமைகள் இத்தகையதாகவே இருந்தன.

ஜின்களில் நம்பிக்கையாளர்கள்*

[46:29] குர்ஆனை அவர்கள் செவியேற்கும் பொருட்டு, பல ஜின்களை நாம் உம்மிடம் வழி நடத்தினோம் என்பதை நினைவு கூர்வீராக. அவை அங்கு வந்து சேர்ந்தவுடன், அவை, “கவனித்துக் கேளுங்கள்” என்று கூறின. அது முடிவடைந்து விட்டவுடன், எச்சரித்தவாறு, அவை தம் சமூகத்தாரிடம் விரைந்தன.*
அடிகுறிப்பு

[46:30] அவை கூறின, “எங்கள் சமூகத்தாரே, மோஸஸிற்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட, மேலும் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கின்ற ஒரு புத்தகத்தை நாங்கள் செவியேற்றோம். அது சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றது; சரியான பாதையின் பால்.
[46:31] “எங்கள் சமூகத்தாரே, கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளியுங்கள், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அப்போது உங்களு டைய பாவங்களை அவர் மன்னிப்பார், மேலும் வலிநிறைந்ததொரு தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றி விடுவார்”.
[46:32] கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளிக்கத் தவறிவிட்டவர்கள் தப்பித்து விட முடியாது, மேலும் அவரை விடுத்து வேறு இரட்சகர் எவரும் இருக்க மாட்டார்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.
[46:33] சிறிதளவும் சிரமமின்றி வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த கடவுள், இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ஆற்றலுள்ளவராக இருக்கின்றார் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா? ஆம், உண்மையில்; அவர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றார்.
[46:34] நம்ப மறுப்பவர்களை நரக நெருப்பிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற அந்நாளில், அவர் களிடம், “இது சத்தியம்தான் அல்லவா?” என்று கேட்கப்படும். அவர்கள், “ஆம், உண்மையில், எங்கள் இரட்சகர் மீது ஆணையாக” என்று பதிலளிப்பார்கள். அவர், “அப்படியென்றால் உங்களுடைய நம்பிக்கையின்மைக்காக தண்டனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*

[46:35] ஆகையால், பொறுமையை மேற்கொண்டிருந்த உமக்கு முந்திய உறுதி வாய்ந்த தூதர்களைப் போல் பொறுமையுடன் இருப்பீராக. தவிர்த்து விட முடியாதவாறு அவர்களிடம் வர இருக்கின்ற தண்டனையைக் காண அவசரப்படாதீர். அவர்கள் அதனைக் காணும் அந்நாளில், நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் வாழ்ந்திருந்ததைப் போல் தோன்றும். இது ஒரு பிரகடனமாகும்: தொடர்ந்து அழிக்கப்படுபவர்கள் தீயவர்கள் தான் அல்லவா?
அடிகுறிப்பு